

ஸ்ரீஹரிகோட்டா,
இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், என்விஎஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று (அக்டோபர் 30) இரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள 'நேவிக்' வழிகாட்டுதல் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, துல்லியமான இருப்பிடச் சேவைகளை மீண்டும் முழுமையாக வழங்குவதே இந்த செயற்கைக்கோளின் முக்கிய நோக்கமாகும்.
இதில் அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. இது துல்லியமான நேரக் கணக்கீடு மற்றும் இருப்பிடத் தகவல்களை வழங்க உதவும்.
2,232 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைக்கோள் பொதுமக்களின் இருப்பிடச் சேவைகள், பேரிடர் மேலாண்மை, ரெயில்வே போக்குவரத்து மற்றும் ராணுவம் சார்ந்த பாதுகாப்புத் தேவைகளுக்கு பெரிதும் உதவும்.
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் இன்று இரவு நடைபெற உள்ள ஏவுதல் நிகழ்வை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.