எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதே மக்களின் விருப்பம் ராகுல் காந்தி தகவல்

பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதே மக்களின் விருப்பம் ராகுல் காந்தி தகவல்
Published on

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் மோடியை எதிர்க்க எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார். மராட்டியத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் அரசியல் சாசனம் மற்றும் தேசிய நிறுவனங்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். எனவே பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது என்பது, பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சிகளின் விருப்பம் மட்டுமல்ல. மாறாக மக்களின் உணர்வும் அதுவேயாகும்.

எனவே இத்தகைய குரல்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை அளிக்குமாறு பிரதமரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை.

பணமதிப்பு நீக்கம் மூலமாக மும்பை மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இங்குள்ள சிறு நிறுவனங்கள், வர்த்தகர்கள், தோல் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் அனைத்தும் கப்பார் சிங் வரியால் (ஜி.எஸ்.டி.) தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. பணமதிப்பு நீக்கத்தால் சிறு வணிகர்களும், ஒட்டுமொத்த நாடும் சோகத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. அவர்களுக்காக நாங்கள் போராடி வருகிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 130 டாலராக இருந்தது. ஆனால் தற்போது 70 டாலராக குறைந்திருக்கிறது. எனினும் அதன் பலன்களை மக்கள் அனுபவிக்க முடியவில்லை. இந்த பணம் எங்கே செல்கிறது? 15 முதல் 20 செல்வந்தர்களின் பாக்கெட்டுகளுக்கு தான் செல்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com