ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரில் தூங்கிய நபர் உயிரிழப்பு

ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரிலேயே தூங்கிய நபர் உயிரிழந்து உள்ளார்.
ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரில் தூங்கிய நபர் உயிரிழப்பு
Published on

நொய்டா,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் கார் ஒன்றில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு சுந்தர் பண்டிட் என்ற நபர் தூங்கியுள்ளார். அதற்கு அடுத்த நாள் சுந்தரை அவரது சகோதரர் எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் சுந்தர் மயக்கமடைந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்பின்னர் அவரது உடலை குடும்பத்தினர் தகனம் செய்து இறுதி சடங்குகளையும் செய்து விட்டனர்.

இதுபற்றி போலீசாரிடம் எந்த தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்ற வகையில் போலீசாரிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், இந்த சம்பவம் பற்றி அறிந்து போலீசார் அடிப்படை தகவலை திரட்டியுள்ளனர். அதில் சில விவரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. சுந்தர் பண்டிட், பரோலா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இதுதவிர செக்டார் 107ல் அவருக்கு மற்றொரு வீடு உள்ளது. வார இறுதியில் அங்கு வருவது அவருக்கு வழக்கம். அவரது வீட்டின் கீழ் பகுதியில் காரை நிறுத்தும் இடம் உள்ளது. அதில் காரை நிறுத்தி விட்டு குடிபோதையில் அதிலேயே தூங்கி இருக்கிறார்.

அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்று சுந்தரின் குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் காரின் என்ஜினில் இருந்து வெளிவந்த கார்பன் மோனாக்சைடு போன்ற விஷ வாயுக்களை, ஆன் செய்யப்பட்ட ஏ.சி.யானது உள்ளே இழுத்து அவற்றை சுந்தர் சுவாசித்து இருக்க கூடும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால் சுவாசிப்பதற்கு தேவையான பிராணவாயு கிடைக்காமல், சிக்கல் ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com