கோழிக்கோட்டில் தரை இறங்கும் போது விமானம் இரண்டாக உடைந்தது; 19 பேர் பலி- 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், தரை இறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
கோழிக்கோட்டில் தரை இறங்கும் போது விமானம் இரண்டாக உடைந்தது; 19 பேர் பலி- 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Published on

கோழிக்கோடு,

கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால், ஏராளமான இந்தியர் கள் நாடு திரும்ப முடி யாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

அவர்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில்3 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டிச் சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விமானி அறையில் இருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

விமானி உள்பட 19 பேர் பலி

இதனால் விமான நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்தவர்களை மீட்க தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புக்குழுவினர் ஓடுபாதைக்கு விரைந்தனர். ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.

இந்த கோர விபத்தில் விமானிகளில் ஒருவரும் மேலும் 19 பயணிகளும் பலியானார்கள். பலியான விமானியின் பெயர் வசந்த் சாத்தே என விசாரணையில் தெரியவந்தது. மேலும் இறந்த பயணிகளில் 2 பேர் சஜீவன், சார்புதீன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

பயணிகள் படுகாயம்

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு 24 ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 15 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீட்புப்பணிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மழை பெய்து கொண்டிருந்ததால், குடைகளை பிடித்தபடி, பொதுமக்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தனர். மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனாதிபதி துயரம்

இந்த விபத்து குறித்து அறிந்ததும் துயரம் அடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கேரள கவர்னர் ஆரிப் முகமது கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோழிக்கோட்டில் உள்ள நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார்.

இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள ராம்நாத் கோவிந்த், பாதிக்கப்பட்ட பயணிகள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் விபத்து பற்றி அறிந்ததும் பிரதமர் மோடி மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்தார். அவர், பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுவதாகவும் கூறி உள்ளார்.

விமான விபத்து குறித்து அறிந்ததும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தாகவும், பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து, துபாயில் உள்ள இந்திய தூதரகம் பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக 4 தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது விமானம் தீப்பிடித்து விடும். இதனால் உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும்.

ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த விபத்தின் போது விமானம் அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்காததால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

விமானத்தை முதல் முறை தரை இறக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும், இரண்டாவது முறையாக தரை இறக்கிய போது விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com