ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்

பெலகாவியில் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றினார்.
ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்
Published on

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் பெலகாவி டவுன் வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் காசிநாத் ஈரகார். இவர் பெலகாவி டவுன் அசோகா சந்திப்பில் நேற்று முன்தினம் காலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக ஒரு பெண் அவசர, அவசரமாக வந்தார். அவரது நடவடிக்கைகளை போலீஸ்காரர் காசிநாத் கவனித்தார். இந்த நிலையில் திடீரென அந்த பெண் அங்குள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதைப்பார்த்த போலீஸ்காரர் காசிநாத், ஓடிச்சென்று ஏரியில் குதித்து அந்த பெண்ணை மீட்டார். மேலும் அவரை தற்கொலை செய்து கொள்வதில் இருந்து காப்பாற்றினார். பின்னர் அவரை பெலகாவி டவுன் போலீசரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் பைலஒங்கலா தாலுகா சிவடகுந்தி கிராமத்தைச் சேர்ந்த சிவலீலா என்பதும், பெலகாவி டவுனில் உள்ள ஆட்டோ நகரில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக சிவலீலா தற்கொலை செய்து கொள்ள முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவலீலாவுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஏரியில் குதித்து மீட்ட போலீஸ்காரர் காசிநாத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com