7 மாநிலங்களில் 26-ந் தேதி நடக்கவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், வரும் 26-ந்தேதி 7 மாநிலங்களில் 18 இடங்களுக்கு நடக்கவிருந்த மாநிலங்களவை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்துள்ளது.
7 மாநிலங்களில் 26-ந் தேதி நடக்கவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு (6), மராட்டியம் (7), ஒடிசா (4), மேற்கு வங்காளம் (5), பீகார் (5), ஆந்திரா (4), குஜராத் (4), அசாம் (3), மத்திய பிரதேசம் (3), ராஜஸ்தான் (3), தெலுங்கானா (2), சத்தீஷ்கார் (2), அரியானா (2), ஜார்கண்ட் (2), இமாசலபிரதேசம் (1), மணிப்பூர் (1), மேகாலயா (1) என 17 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 55 இடங்களுக்கு வரும் 26-ந்தேதி தேர்தல் நடத்த இருப்பதாக தேர்தல் கமிஷன் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இவற்றில் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான தேர்தல் போட்டியின்றி நடந்து முடிந்து விட்டன.

ஆனால் ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகலயா, ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் மொத்தம் 18 இடங்களுக்கான தேர்தலில் போட்டி உள்ளதால் வரும் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க இருந்தது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கிற வகையில் நாடு முழுவதும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநிலங்களவை தேர்தல் நடக்கவிருந்த ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகலயா, ராஜஸ்தான் மாநிலகளில் முழுமையான மூடலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக இந்த மாநிலங்களில் நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com