பிரதமரும், அமித்ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது, மசோதாவில் வேறாக இருக்கிறது: கனிமொழி எம்.பி.

தொகுதி மறுவரையறை இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கக்கூடியது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
பிரதமரும், அமித்ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது, மசோதாவில் வேறாக இருக்கிறது: கனிமொழி எம்.பி.
Published on

புதுடெல்லி,

தொகுதி மறுவரையறை மசோதா மீது மக்களவையில் 2-வது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றியதாவது:-

8 கோடி மக்கள் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் நாடாளுமன்றம் அவசரமாக நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கக் கூடியது. மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கும் போதே, அச்சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியிட்டது ஏன்?.

இந்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மனிதவளக் குறியீடு திட்டங்களில் தென் மாநிலங்கள் அதிக கவனம் செலுத்தின. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டால், பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது.

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது, மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரைறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வு என்பதை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?.

மக்கள் தொகை கணக்கீட்டின் படி மறுவரையறை செய்தால், உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் குறையத்தான் செய்யும். தற்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும். கடைசியாக வெளிவந்த சென்செஸ் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதாவின் பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது.

அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா?. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா?. 15 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையை வைத்து தொகுதி மறுவரையறை கொண்டு வர முயற்சி.

2011 மக்கள் தொகையின்படி தமிழ்நாடு 11 இடங்களை இழக்கும், ஆனால் 50 இடங்கள் கிடைக்கும் என்கிறார் அமித்ஷா. எந்த ஆண்டு மக்கள்தொகையை வைத்து தொகுதி மறுவரையறை என்பதை ஆளுங்கட்சியே முடிவு செய்யும் என்கிறது மசோதா. தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இந்தியாவின் வரைபடத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com