

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு காற்றின் தரக் குறியீடு(AQI) அளவு 400-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. இது காற்று மாசு மிகத் தீவிரமாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கோஷங்கள் காற்று மாசு விவகாரத்தில் உண்மையாகிவிட்டது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. காற்று மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், சுவாசிப்பது கடினமாகிவிட்டது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சுவாசப் பிரச்சினை மோசமடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400-ஐ தாண்டிவிட்டது. காற்றின் தரக் குறியீட்டைப் பொறுத்தவரை, ‘பிரசார’ மந்திரியின் கோஷங்கள் உண்மையாகி வருகின்றன. பிரதமரின் கோஷங்கள் காற்றில் கலந்து, இப்போது காற்றே விஷமாக மாறிவிட்டது!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.