வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் மத்திய அரசு அறிவிப்பு

வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பாராளுமன்ற கூட்டுக்குழு இம்மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.

விரைவில் தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயத்தில், இதில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்று பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும்போது, அதை சரி செய்வதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

இதற்காக, தீர்வு கழகம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக்கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல் தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்பு தொகையும் சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்த புதிய மசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்துசெய்ய வழிவகுக்கிறது.

இதனால், பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் திவால் ஆவதை தடுக்க, பொதுமக்களின் பணம் எடுத்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

எப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களையும் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. வங்கிகளை பலப்படுத்துவதற்காகவே, வங்கிகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்.

இது, வங்கிகளை பலப்படுத்துவதற்குத்தான். இதற்காக, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று அர்த்தம் அல்ல.

ஒருவேளை, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், வங்கிகளில் பொதுமக்கள் போட்டு வைத்துள்ள பணத்துக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். அதில் மத்திய அரசு மிகத்தெளிவாக உள்ளது.

மேலும், இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. அக்குழு என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com