

கொல்கத்தா,
கடந்த மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி, பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சோனார்பூர் பகுதியில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும். மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி சென்றார்.
பலியான திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது, தகவல் அறிந்து உள்ளூர் பெண்கள் சிலர், கையில் துடைப்பங்கள் மற்றும் மூங்கில் குச்சிகளுடன் அந்த வீட்டின் முன்பு திரண்டனர்.
"அபிஷேக் பானர்ஜி ஏன் வந்தார்? அவர் வந்த வீட்டுக்காரரும் திருடர்தான். ஒரு திருடர் வீட்டுக்கு இன்னொரு திருடர் வந்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட 'நிர்பயா' வீட்டுக்கு சென்றாரா?" என்று அந்த பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
அப்போது, அடையாளம் தெரியாத சில நபர்கள், அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். கற்கள், ஷூக்கள், முட்டைகள் ஆகியவற்றை அவரை நோக்கி வீசினர். அவரை அடிக்கவும், உதைக்கவும் முயன்றனர். 'திருடன். திருடன்' என்று கூச்சலிட்டனர்.
அபிஷேக் பானர்ஜியின் சட்டை கிழிந்தநிலையில், அவருக்கு போலீஸ் ஹெல்மெட் அணிவித்து போலீசார் அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். தாக்குதலில் அபிஷேக் பானர்ஜி காயம் அடைந்தார். அவர் தனியார் மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இது திட்டமிட்ட தாக்குதல் அவர்கள் என்னை கொல்ல முயன்றனர். அந்த இடத்தில் போலீசாரே இல்லை என்று அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த மாநில பா.ஜனதா தலைவர் சமிக் பட்டாச்சார்யா, "பல ஆண்டுகளாக சித்ரவதை செய்யப்பட்ட உள்ளூர் மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் இச்சம்பவம்" என்று கூறினார்.
இந்தநிலையில், அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்றபோது முட்டை மற்றும் கற்களால் தாக்கிய உள்ளூர்வாசிகள் தாக்கி உள்ளனர்.
காயமடைந்த அபிஷேக் பானர்ஜிக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளை பாஜக அரசு மிரட்டுகிறது. ஆட்சியாளர்களே கொலையாளிகளாக மாறிவிட்டனர். பாஜகவுக்கு வெக்கமாக இல்லையா? என ஆவேசமாக கூறினார்.