தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி: லாலு பிரசாத் யாதவ் மதிய உணவு சாப்பிட மறுப்பு

தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியால், லாலு பிரசாத் யாதவ் மதிய உணவு சாப்பிட மறுப்பு தெரிவித்தார்.
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி: லாலு பிரசாத் யாதவ் மதிய உணவு சாப்பிட மறுப்பு
Published on

பாட்னா,

நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் படுதோல்வி அடைந்ததால் சாப்பிடாமல் விரக்தியில் இருந்த லாலு பிரசாத் யாதவ், டாக்டர்களின் அறிவுரையால் 2 நாட்களுக்குப்பின் மதிய உணவு சாப்பிட்டார்.

பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு சிறை தண்டனை பெற்றார். சிறையில் அவருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொற்றிக்கொண்டதால், கடந்த டிசம்பர் மாதம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 19 இடங்களில் அந்த கட்சி போட்டியிட்டது. ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியுடன் பகிர்ந்து கொண்டது.

இந்த தேர்தலில் மெகா கூட்டணி படுதோல்வியை அடைந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் மட்டுமே ஒரு தொகுதியை வென்றது. ராஷ்ட்ரீய ஜனதாதளத்தால் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. அண்டை மாநிலமான ஜார்கண்டிலும் லாலு பிரசாத்தின் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு கிடைத்துள்ள மிகவும் மோசமான தோல்வியால் லாலு பிரசாத் யாதவ் கடும் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்தார். மருத்துவமனையில் இருந்ததால் முதல் முறையாக லாலு பிரசாத்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியவில்லை. இதுவும் அவருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.

எனவே நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து அவர் எதுவும் சாப்பிடவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தண்ணீர் கூட அருந்த மறுத்தார். இதனால் அவரது உறவினர்களும், கட்சியினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

லாலு பிரசாத் யாதவின் இந்த நடவடிக்கையால் அவரது உடல்நிலை மேலும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டது. எனவே இது தொடர்பாக டாக்டர்கள் அவரிடம் எடுத்துக்கூறினர். சரியான உணவு உட்கொண்டால்தான் அவரது சிகிச்சையை தொடர முடியும் எனக்கூறி, உணவு சாப்பிடுமாறு டாக்டர்கள் கெஞ்சினர்.

டாக்டர்களின் இந்த அறிவுரையால் அவர் மனம் மாறினார். எனவே 2 நாட்களுக்குப்பின் நேற்று முன்தினம் அவர் மதிய உணவு சாப்பிட்டார். இதனால் நிம்மதி அடைந்த டாக்டர்கள் சிகிச்சையை தொடர்ந்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

லாலு பிரசாத் யாதவின் இந்த மனமாற்றம் அவரது குடும்பத்தினரையும், கட்சியினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் படுதோல்வி, கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் எம்.எல்.ஏவான மகேஷ்வர் பிரசாத் யாதவ் போர்க்கொடி தூக்கி உள்ளார். தனது இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் கட்சி உடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com