

பனாஜி,
இந்தியாவில் 5 மாநிலங்களில் வருகிற பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பா.ஜ.க. சார்பில் கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியானது. கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த், சான்கியூலிம் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார் என்று பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.
பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியான மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரின் பெயர் இடம்பெறவில்லை. மனோகர் பாரிக்கர் 3 முறை கோவா மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்பால் பாரிக்கர் அவரது தந்தையின் தொகுதியான பனாஜியில் போட்டியிட கேட்டிருந்தார். ஆனால் பா.ஜ,க. சார்பில் பனாஜி தொகுதியில் போட்டியிட பாபுஷ் மான்செரட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உத்பால் பாரிக்கர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
பா.ஜ.க., உத்பால் பாரிக்கருக்கு பனாஜியில் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்துவிட்ட நிலையில் அதிருப்தியில் உள்ள உத்பால் பாரிக்கர் விரைவில் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில், கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் இருந்து சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.