

அலிப்பூர்துவர்,
வடகிழக்கு ரயில்வேயின் எல்லைப்பிரிவான அலிப்பூர்துவரின் ரெயில்வே பாதைகளில் யானைகள் விபத்துக்குள்ளாகி இறப்பதை தடுப்பதற்கு தேனீக்களின் ஒலியை அலாரமாக வைக்க மேற்கு வங்காள ரெயில்வே நிர்வாகம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:-
மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் யானைகள் அடிக்கடி ரெயில் பாதையில் விபத்துக்குள்ளாகி இறக்கின்றன. இதனை தடுக்க வட கிழக்கு ரெயில்வே நிர்வாகம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி,யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ஒலி பெருக்கி இணைக்கப்பட்டு அதில் தேனீக்களின் ஒலி பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ரெயில் வரும் சமயங்களில் அவ்வொலி எழுப்பப்படும் போது யானைகள் அலறியடுத்து பாதையை விட்டு விலகியோடும். இதனால் விபத்து தடுக்கப்படும். இவ்வொலி 600 மீட்டர் வரை பரவக்கூடியது. மேலும் இச்சாதனம் 2017ன் பாதியில் ரங்கியா பகுதியின் கோல்பாராவில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நாள் வரை அங்கு ஒரு யானை கூட இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினர்.
இந்நிலையில் சென்ற வாரம் அசாமில் உள்ள ஹபாய்பூரின் லூம்டிங் ரிசர்வ் காடு பகுதிகளில் கவுகாத்தி-சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 5 யானைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.