

புதுடெல்லி,
பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா டெல்லியில் நேற்று இரவு காலமானார். சந்தன் மித்ரா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது மகன் குஷன் மித்ரா டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
'சந்தன் மித்ரா ஒரு சிறந்த பத்திரிக்கையாளர், எம்.பி. இந்தி பேசும் பகுதியின் மக்கள், வரலாறு பற்றிய அவரது புரிதல் ஆழமானது. அவரது மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
' சந்தன் மித்ரா தனது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் என்றும் நம் நினைவில் வாழ்வார். அவர் அரசியல் மற்றும் ஊடக உலகில் புகழ் பெற்று விளங்கியவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம்சாந்தி' என்று தெரிவித்துள்ளார்.