

புதுடெல்லி,
'மியூகோர்மைகோசிஸ்' என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவாகளையே தாக்கி வருகிறது. கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், அரியானா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. நாட்டில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க அம்போடெரிசின்-பி என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. கடந்த 26-ந் தேதி, இந்த மருந்து அடங்கிய 29 ஆயிரத்து 250 குப்பிகள், மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்தநிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மேலும் 80 ஆயிரம் அம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.