அந்தமானை புயல் தாக்கியது

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை ‘பாபுக்’ புயல் நேற்று மாலை தாக்கியது.
அந்தமானை புயல் தாக்கியது
Published on

புதுடெல்லி,

கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் உருவான பாபுக் புயல் அந்தமான் தீவு பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது. இந்த புயல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகளை மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்தில் தாக்கும் என்று இந்திய வானிலை இலாகா தெரிவித்து இருந்தது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பாபுக் புயல் நேற்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது. இதேபோல் நிகோபார் தீவு பகுதிகளும் புயலின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பல இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. புயல் அந்தமானை தாக்குவதற்கு முன்பாகவே வலு இழந்து போனதால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கவில்லை.

அதன்பின்னர் பாபுக் புயல் ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென்கிழக்கு வங்காள வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்ந்தது.

புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை.

முன்னதாக வானிலை இலாகாவின் அறிக்கையை சுட்டிக் காண்பித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பாபுக் புயல் குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கையின்படி சாலை வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கு இடையூறும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்படலாம் என்பதால் 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com