சபரிமலை கோவில் விவகாரத்தில் போராட்டம்: ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.
சபரிமலை கோவில் விவகாரத்தில் போராட்டம்: ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இடதுசாரி கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்து அமைப்புகள் கேரள அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. பாரதீய ஜனதா சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட சவால்களை கேரள மக்கள் ஒற்றுமையுடன் எதிர்கொண்டனர். மக்களிடம் நிலவும் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் நோக்கத்துடன் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பணிவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினையில் அரசின் நிலைப்பாடு குறித்து யாருக்காவது தவறான கருத்துகள் இருந்தால், அது தொடர்பாக யாருடனும் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது.

முன்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னிதலா, அதன்பிறகு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் இந்த பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது என்று அவர் கூறினார்.

ரமேஷ் சென்னிதலா கூறுகையில், மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்றார்.

முன்பு ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, சபரிமலை கோவிலின் வழிபாட்டு முறைகளும், பக்தர்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இடதுசாரி கூட்டணி அரசு அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கவுரி லட்சுமி பாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை கோவில் தொடர்பாக நடந்து வரும் சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நடைமுறைகள் மீறப்படுவது வருந்தத்தக்கது என்றும் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com