கொரோனா அச்சுறுத்தலால் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட வக்கீல்கள் தவிர வேறு யாருக்கும் கோர்ட்டுக்குள் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. மத்திய அரசு கடந்த 5-ந் தேதி, மக்கள் பெரிய அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டும் தனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் அறிவிப்பு மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பொது சுகாதார நிபுணர்களின் கருத்துகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. கோர்ட்டுகளுக்கு வரும் அனைத்து பார்வையாளர்கள், மனுதாரர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பாதுகாவலர்கள், நிர்வாக ஊழியர்கள், பயிற்சி பெறும் மாணவர்கள், ஊடகத்தினர் ஆகியோரின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கோர்ட்டுகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவசர வழக்குகளை மட்டுமே குறிப்பிட்ட அமர்வுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட வக்கீல்கள் தவிர வேறு யாரும் சுப்ரீம் கோர்ட்டின் கோர்ட்டு அறைகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com