செக் மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்டு

செக் மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
செக் மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

செக் மோசடி வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அரசியல்சாசன அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் 10-ந் தேதி நடைபெற்ற விசாரணையில் பிறப்பித்த உத்தரவில், செக் மோசடி போன்ற வழக்குகளை விரைவில் விசாரிக்க பரிந்துரைகளை வழங்க மும்பை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்.சி.சவுகான் தலைமையில் குழுவை அமைக்கிறோம். நாடு முழுவதும் நிலுவையில் உள்ள செக் மோசடி வழக்குகளை விரைவில் விசாரிப்பதற்கான பரிந்துரைகளை இக்குழு 3 மாதத்துக்குள் அளிக்கும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

செக் மோசடி வழக்குகளில் உடனடியாக விசாரணையைத் தொடங்காமல், குற்றம்சாட்டப்பட்டவருக்கு முதலில் சம்மன் அனுப்ப வேண்டும். சம்மனுக்கு கிடைக்கும் பதிலை வைத்து விசாரணையை தொடங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

மேலும், விசாரணை கோர்ட்டுகளுக்கு நடைமுறை உத்தரவுகளை ஐகோர்ட்டுகள் பிறப்பிக்க வேண்டும்.

செக் மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் நபர் கோர்ட்டின் அதிகார எல்லைக்கு அப்பால் வசிக்கும்போது, போதுமான முகாந்திரங்கள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்.

செக் மோசடி வழக்குகளில் சாட்சியாக உள்ள புகார்தாரர் அளிக்கும் பிரமாண பத்திரத்தையே சாட்சியாக கொள்ள வேண்டும். புகார்தாரரை கோர்ட்டுக்கு அழைக்கவேண்டிய அவசியமில்லை.

ஓராண்டுக்குள் ஒரே பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரே நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் செக் மோசடி வழக்குகள் அனைத்தையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் இருத்தல் வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.

செக் மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக அளிக்கப்படும் ஒரு சம்மனை, அவர் தொடர்புடைய அனைத்து செக் மோசடி வழக்குகளுக்கும் சம்மனாக கருத வேண்டும் என தெரிவித்து விசாரணை கோர்ட்டுகளுக்கு நடைமுறை உத்தரவுகளை ஐகோர்ட்டுகள் பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தை 8 வாரங்கள் கழித்து, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிடவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும் மொத்தம் 35 லட்சம் செக் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இந்த வழக்குகளை விரைவில் விசாரிக்க கூடுதல் கோர்ட்டுகளை ஏற்படுத்தமுடியுமா என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கவை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com