பிரான்ஸ் நாட்டில் இருந்து போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

ரபேல் போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் பிரபல தசால்த் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2012ம் ஆண்டு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தற்போது மோடி அரசு அதே ரக விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் இதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானம் இந்திய அரசு வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளது. மேலும் அரசியல் சாசனத்தின் 253வது பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே இந்த விமானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல்மந்திரியுமான மனோகர் பாரிக்கர், தொழில் அதிபர் அனில் அம்பானி, பிரான்ஸ் தசால்த் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் ஊழல் பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்றும் வக்கீல் சர்மா கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்பாக நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்கும் விதமாக பட்டியலிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com