சட்ட வழக்கு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்ட வழக்கு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
சட்ட வழக்கு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல்
Published on

புதுடெல்லி,

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்ட வழக்கு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. மற்றொரு தரப்பு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வு பெற்ற அதிகாரி, தன் மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், ஒரு அரசு ஊழியர் மீது கொடுக்கப்படும் புகாரின் அடிப்படையில், அவரை உடனடியாக கைது செய்துவிடக் கூடாது, டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்த வேண்டும், அதில் முகாந்திரம் இருந்தால்தான் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்அதிகாரி அனுமதியுடன் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. பிரதமர் நரேந்திர மோடியிடம், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தின.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அதில், தீர்ப்பை மறுஆய்வு செய்து, திருத்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு, எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்றும், எனவே, ஏற்கனவே உள்ள விதிமுறைகளை நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பு சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை நடந்து வருவதால், அவசர மனுவாக விசாரிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அவசரமாக விசாரணைக்கு ஏற்குமாறும், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறும் மனுதாரரின் வக்கீல் மனோஜ் கவுர்கேல்லா கேட்டுக்கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com