முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Published on

புதுடெல்லி,

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் அவர் பிப்ரவரி 7-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுக்கு மேல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதால் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பார்த்திபன், கீழ்க்கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனக்கு வழக்கு தொடர்பான உரிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை, கிருஷ்ணகிரி கோர்ட்டில் இருந்து வழக்கு மாற்றப்பட்டபோது அங்கு நடைபெற்ற பல்வேறு குறிப்புகள் வழங்கப்படவில்லை. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு தனது கோரிக்கையை சரியாக ஆராயாமல் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. எனவே தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்துசெய்ய வேண்டும், தான் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வினீத்சரண், பாலகிருஷ்ண ரெட்டி விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர் சரணடைவதில் இருந்து விலக்கு தொடரும் என்றும் அவரது மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com