

புதுடெல்லி,
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பில் இருந்து 61 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தை 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி உத்தரவிட்டது.
சபரிமலை வழக்குடன், மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது பற்றியும், பிற மதங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும், தாவூதி போரா இன பெண்கள் தொடர்பான சில பிரச்சினைகளையும் இந்த அமர்வு விசாரிக்கும் என்று அந்த உத்தரவில் கோர்ட்டு கூறி இருந்தது.
அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சாந்தான கவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகிய 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் விசாரணைக்கு எடுக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து வக்கீல்கள் விவாதித்து எடுத்த முடிவுகள் அனைத்து மனுதாரர்களாலும் ஏற்கப்படவில்லை என்றும், இதனால் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளே இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் வாதாடுகையில், இதுபோன்ற மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் வகையில் குறைந்த எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்ட அமர்வு அதிக எண்ணிக்கையில் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றலாம். ஆனால் மறுஆய்வு மீதான விசாரணை என்பது ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஏதாவது தவறு அல்லது விடுபடுதல் இருந்தால் அதுபற்றி மட்டுமே விசாரிக்கும் வகையில் இருக்க வேண்டும். தலைமை நீதிபதி தற்போது எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும், முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் ஏற்கனவே விளக்கமான பதில் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த அமர்வில் இருந்த ஐந்தில் 4 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை வழங்கி இருந்தார்கள். அதை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுக்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அமர்வு எப்படி புதிய அம்சங்களை விசாரிக்கும் வகையில் 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியும்? என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நாங்கள் இந்த மறுஆய்வு மனுக்களை விசாரிக்கப் போவது இல்லை. அதற்கு பதிலாக தீர்ப்பில் எழுப்பப்பட்டு உள்ள முக்கியமான அம்சங்கள் குறித்த கேள்விகள் பற்றி மட்டுமே விசாரணை நடத்தப்போகிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து வாதிட்ட பாலி நாரிமன், அவ்வாறு செய்வதற்கு இந்த அமர்வுக்கு அதிகாரம் கிடையாது. இந்த அமர்வு, சபரிமலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை மட்டுமே விசாரிக்க முடியும். மறுஆய்வு மனுக்களை விசாரிப்பதற்காக 9 பேர் அடங்கிய அமர்வை அமைத்தது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, அரசியல் சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26 ஆகியவற்றில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் மதரீதியான சுதந்திரம் ஆகியவை குறித்து இந்த அமர்வில் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும், அவற்றை தனித்தனி மனுக்கள் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது என்றும், முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் மசூதியில் பெண்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று கூறி உள்ளதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
உடனே பாலி நாரிமன், தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் உள்ள விவரங்களை விசாரிக்காமல் பெரிய அளவிலான அம்சங்கள் பற்றி முடிவு எடுக்க முடியாது என்றார்.
அவரை தொடர்ந்து வாதிட்ட மற்றொரு மூத்த வக்கீலான கபில் சிபல், இது தொடர்பாக கோர்ட்டு என்ன தெரிவித்தாலும் அதன் மீதான பாதிப்பு நாடு தழுவிய அளவில் இருக்கும் என்றும், பாலி நாரிமன் கூறுவதை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். மற்றொரு மூத்த வக்கீலான ராஜீவ் தவான் வாதாடுகையில், சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்களை இந்த அமர்வு விசாரிக்கலாம். சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் கோர்ட்டு எழுப்பியுள்ள பிற அம்சங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று பாலி நாரிமன் கூறுவதை நான் ஆதரிக்கிறேன்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, 9 நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வு சபரிமலை தீர்ப்பு தொடர்பான மறுஆய்வு மனுக்களை விசாரிக்காது என்றும், தாவூதி போரா இன பெண்கள், பார்சி பெண்களின் உரிமைகள் குறித்த தனித்தனி மனுக்களையும் விசாரிக்காது என்றும் கூறினார்.
அதன்பிறகு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாவது:-
இந்த வழக்கில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்து 9 நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வு விரைவில் முடிவு செய்யும். இந்த வழக்கில் உள்ள அனைத்து வக்கீல்களும், விசாரணைக்கு எடுக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். எனவே அதுபற்றி இந்த அமர்வு முடிவு எடுக்கும். இதற்காக விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. வாதங்களை முன்வைப்பதற்காக யாருக்கு எவ்வளவு கால அவகாசம் வழங்குவது என்பது குறித்து வருகிற வியாழக்கிழமை முடிவு செய்யப்படும். அடுத்த வாரத்தில் இருந்து இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.