

ஐதராபாத்,
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மீண்டும் வெற்றிப்பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், தொடர்ந்து 2-வது முறையாக கடந்த டிசம்பர் 13-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அப்போது அவருடன் முகமது மெக்மூத் அலி என்பவர் மட்டும் உள்துறை மந்திரியாக பதவி ஏற்றார். மந்திரி சபை உருவாக்கப்பட்டு 2 மாதங்கள் முடிவடைந்த போதும் முழுமையான மந்திரிசபை அமைக்கப்படாமல் இருந்தது.
2 பேரை மட்டும் கொண்ட மந்திரிசபை மூலம் ஆட்சி நடத்துவதை எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டித்தன. நிஜாம் பாணியில் ஆட்சி நடப்பதாகவும், மந்திரி பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தியாளராகி தனக்கு எதிராக திரும்பிவிடுவார்கள் என சந்திரசேகர ராவ் பயப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்திரசேகர ராவ் நேற்று தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார். புதிதாக 10 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் நரசிம்மன் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.