

திருவனந்தபுரம்,
கேரளாவின் பாரம்பரிய கலை வழிபாடான தெய்யத் திருவிழாவில், காசர்கோடு மாவட்டத்தில் ஆற்றைக் கடந்து வந்த தெய்யங்களுக்கு பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கேரளாவின் வட மலபார் பகுதியில் கண்ணூர் மற்றும் காசர்கோடு மலையாள மாதமான ‘துலாம்’ பிறந்ததைத் தொடர்ந்து தெய்யம் திருவிழா பருவம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, கடந்த (புதன்கிழமை) அராயி நதிக்கரையில், புகழ்பெற்ற அராயி ஏரத் முண்டியா தெய்யக்காவ் திருவிழாவின் அரிய சடங்குகள் பக்திப் பரவசத்துடன் தொடங்கின.
இத்திருவிழாவின் மிக முக்கிய சடங்காக, கார்த்திகா சாமுண்டி தெய்யம் மற்றும் அதன் காவல் தெய்வங்கள் அராயி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு படகு மூலம் அழைத்து வரப்பட்டன. பிரம்மாண்டமான தலைக்கவசங்கள், வண்ணமயமான முகப்பூச்சுகள் மற்றும் பாரம்பரிய உடைகளுடன் தெய்வீக வடிவில் தெய்யக் கலைஞர்கள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
ஆற்றைக் கடந்து நிலப்பகுதியை அடைந்த தெய்யங்களை, கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வரவேற்றனர். கேரளாவுக்கே உரிய பாரம்பரிய செண்டை மேளம், தாள வாத்தியங்கள் மற்றும் பந்தம் ஏந்திய தீவட்டிகளுடன் மங்களகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடவுளாகவே கருதப்படும் தெய்யங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் ஊர்வலமாக கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
கேரளாவின் காவுகள் என்று அழைக்கப்படும் புனிதக் காடுகளிலும், பாரம்பரியக் கோவில்களிலும் இந்த அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள தெய்யம் திருவிழாக்கள், அடுத்த ஆண்டு மே மாதம் வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. இந்த தெய்யக் கோலங்களைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு மக்கள் பலரும் கேரளாவுக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர்.