

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மெஹ்ராலி எனும் இடத்தில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தில் 3-வது கட்ட தவணையாக பிரதமர் மோடி இன்று ரூ.18 ஆயிரம் கோடியை வழங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிதியுதவி மூலம் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெறுவார்கள். நாட்டில் உள்ள விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி பிரதமர் மோடிதான்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்காகவே கொண்டுவரப்பட்டவை. வேளாண் விளை பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலை முறையை யாராலும் நீக்க முடியாது, விவசாயிகளிடம் இருந்து நிலங்களையும் பறிக்க முடியாது. விவசாயிகளுடனும், விவசாயிகள் சங்கத்துடனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முழுமனதுடன் அரசு தயாராக இருக்கிறது.
ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டுவிடும் என்று விவசாயிகளை தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்துகின்றன. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 2013-14-ம் ஆண்டில் வேளாண் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.21ஆயிரத்து 900 கோடிதான். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் அது ரூ. ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 399 கோடியாக உயர்த்தப்பட்டது.
இவ்வாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.