

உஸ்மானாபாத்,
மராட்டியத்தின் உஸ்மானாபாத் நகரில் சோலாப்பூர்-அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென கவிழ்ந்தது.
அந்த லாரியில், விலை உயர்ந்த மொபைல் போன்கள், கணினிகள், எல்.இ.டி. டி.வி.க்கள், பொம்மைகள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் இருந்தன. அவை விபத்து நடந்ததில் லாரியில் இருந்து கீழே பரவி கிடந்துள்ளன.
அதனை கண்ட அந்த பகுதி கிராமவாசிகள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் லாரியில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக கிடைத்த பொருட்களை சுருட்ட தொடங்கினர். சிலர் லாரியின் கதவை உடைத்து உள்ளனர்.
இதன்பின்னர் உள்ளூர் போலீசார் குழு மற்றும் வன்முறையை கட்டுப்படுத்தும் தனிப்படை ஆகியவை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிலர் பொருட்களை ஒப்படைத்துள்ளனர். ஆனால், பொருட்களுடன் தப்பி சென்ற சிலரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுபோல மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்பு கொண்ட பொருட்கள் திருடப்பட்டு உள்ளன. அவற்றில் 40 சதவீதம் அளவுக்கு திரும்ப கிடைத்துள்ளன. மற்றவற்றை தேடும் பணியை தொடர்ந்து வருகிறோம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.