‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உரிய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கும் அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, முத்தலாக் நடைமுறையை பின்பற்றுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் (கணவன்) ஜாமீனில் வெளிவர முடியாது என்பது போன்ற விதிமுறைகள் அதில் சேர்க்கப்பட்டு இருந்தன.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்த வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை தொடங்குமுன் குற்றவாளிகள் கோர்ட்டை அணுகி ஜாமீன் பெறலாம் என்பது உள்ளிட்ட வழிமுறைகள் சேர்க்கப்பட்டன. எனினும் ஜாமீன் வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மனைவியின் கருத்தை கேட்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்தலாக் நடைமுறைக்கு எதிரான இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு இந்த மசோதா கிடப்பில் உள்ளது. அடுத்த கூட்டத்தொடரில் இதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. முத்தலாக் மசோதாவில் அடங்கியுள்ள அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு உள்ள இந்த சட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தகவலை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகும் கூட, இந்த நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர சட்டம் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சோனியா காந்தி அமைதியாக இருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய ரவிசங்கர் பிரசாத், இதில் அரசியலுக்கு இடமில்லை எனவும், பாலின கண்ணியம் காப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். முத்தலாக் மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேறுவதற்கு சோனியா, மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த அவசர சட்டத்தின்படி, முத்தலாக் நடைமுறையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண், தனது பிழைப்புக்கான வழிகேட்டு கோர்ட்டை அணுக முடியும். அத்துடன் தனது குழந்தைகளை கூடவே வைத்திருக்கும் உரிமையையும் கோர்ட்டு மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக் நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இஸ்ரத் ஜகான், அவசர சட்டம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடைமுறையில் இது ஒரு மைல்கல் என அவர் கூறி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com