

பாட்னா,
பீகார் மாநிலம், பக்ஸார் பகுதியில் பா.ஜ.க சார்பில் ஜனதா தர்பார் என்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் லட்சுமண் துபே என்ற பா.ஜ.க தொண்டர் எழுந்து, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு எதிராக மத்திய மந்திரியிடம் சரமாரியாக புகார் அளித்தார். ராஜீவ் ரஞ்சன் என்ற அந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நோட்டீஸ் அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மந்திரி, சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் மத்தியில் கடுமையாக சாடினார். அவரை (லட்சுமண் துபே) பார்த்தால் குண்டர் போல் தெரிகிறதா? குண்டர் யாரையாவது எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? திருத்திக் கொள்ளாவிட்டால் உங்கள் சீருடையை கழற்றி விடுவேன் (வேலையில் இருந்து தூக்கி விடுவேன்) என சரமாரியாக திட்டித்தீர்த்தார். ராஜீவ் ரஞ்சன், தனது தரப்பு நியாயத்தை விளக்க முயன்றபோது மந்திரி அவரை பேசவே விடவில்லை.