

புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிற வேளையில் அது தொடர்பாகவும், ஊரடங்கால் முடங்கிய இந்திய பொருளாதாரம் குறித்தும் உலகளாவிய வல்லுனர்கள், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்டோருடன் ஏற்கனவே காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
அந்த வரிசையில் அவர் பிரபல பொது சுகாதார வல்லுனரும், அமெரிக்காவின் ஹார்வர்டு குளோபல் சுகாதார நிறுவனத்தின் டி.எச்.சான் பொது சுகாதார கல்வி நிறுவனத்தின் இயக்குனரும், தற்போது பிரவுன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கல்லூரியின் டீனாக நியமிக்கப்பட்டுள்ளவருமான டாக்டர் ஆசிஷ் ஜாவுடன் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது டாக்டர் ஆசிஷ் ஜா கூறியதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஊரடங்கு மிக முக்கியமான நடவடிக்கை. அது தொடர வேண்டும். ஆனால் அது மட்டுமே இறுதி இலக்கு அல்ல. அது சரியான திசைக்கு செல்வதற்கான ஒரு படி மட்டும்தான்.
நாடு முழுவதும் பொது முடக்கத்தை (ஊரடங்கை) அமல்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கு காரணம், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதுதான். இந்த வைரஸ் புதியது. மனிதகுலம் இது வரை பார்த்திராத ஒன்று. நாம் அனவைரும் பாதிக்கப்படக்கூடிய மக்களாக இருக்கிறோம்.
இந்த வைரஸ் பரிசோதனையை நீங்கள் செய்துகொள்ளாமல் விட்டு விட்டால் அது அதிவேகமாக வளரும். இதில் 2 தேர்வுகள் உள்ளன. உண்மையிலேயே நீங்கள் தீவிரமாக பரிசோதனைகளை செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளானோரின் தடம் அறிந்து தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். நீங்கள் இதை செய்யாவிட்டால், நீங்கள் எல்லாவற்றையும் முடக்கித்தான் ஆக வேண்டும்.
இப்படி எல்லாவற்றையும் முடக்குவதால் வைரஸ் குறைந்து விடுமா? கண்டிப்பாக உங்களால் முடியும். ஆனால் நிச்சயமாக இது கணிசமான பொருளாதார பாதிப்புகளை உள்ளடக்கியதாகும்.
பொது முடக்க காலத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? ஊரடங்கை விலக்கிக்கொள்ள எவ்வாறு தயாராகி வருகிறீர்கள்? ஊரடங்கானது, உங்கள் நேரத்தை வாங்குகிறது. ஆனால் ஊரடங்கு என்பது இலக்கு அல்ல. இது உண்மையிலேயே அற்புதமான பரிசோதனைகள் செய்வதற்கும், தடம் அறிவதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள். இந்த நேரத்தை மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்த விரும்புகிறீர்கள்.
ஊரடங்கு முடிவுக்கு வருகிறபோது, வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அது அடுத்த 6, 12, 18 மாதங்களில் மிகவும் மாற்றமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஊரடங்கின்போது சொந்த ஊர் திரும்பும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி ராகுல் காந்தி குறிப்பிட்டு, அவர்களின் மருத்துவ தேவைகள், பரிசோதனைகள் ஒரு உத்தியாக பயன்படுத்தப்பட வேண்டியது பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு டாக்டர் ஆசிஷ் ஜா பதில் அளிக்கையில், எந்த விதமான அறிகுறிகளையும் கொண்ட எவரையும் நீங்கள் சோதிக்க வேண்டும். நீங்கள் அனைவரையும் அழைத்து செல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எந்த அறிகுறியும் இல்லாமல் ஏராளமானோர் இருப்பார்கள். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டும், அந்த காலகட்டம் முழுவதும் 20 சதவீதம் பேர் அறிகுறிகள் இன்றி இருப்பார்கள் என்று கருதுகிறோம். அடுத்த 20-25 சதவீதம் பேர் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாக நோயை பரப்பி விடுவார்கள். எனவே அறிகுறிகள் உள்ள அனைவரையும் நீங்கள் சோதிக்க வேண்டும் என கூறினார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் ஜோகன் கெய்செக்குடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது பேராசிரியர் ஜோகன் கெய்செக் கூறுகையில், பொது முடக்கத்தை உண்மையிலேயே தளர்த்துவதற்கு பல மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு கட்டுப்பாட்டை செய்ய வேண்டும். அதனால் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று கூறினார்.