

தொகுதி மாறி போட்டி
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது நடைபெறவுள்ள புதுவை சட்டமன்ற தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட அவர் முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது ஆதரவாளர்களுக்கு திடீரென்று அழைப்பு விடுத்தார். அதன்பேரில் வில்லியனூர் மணவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மத்தியில் நமச்சிவாயம் பேசியதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தொகுதி மாறி போட்டியிட இருக்கிறேன். வெற்றி தோல்வியை கருத்தில்கொண்டு தொகுதி மாறவில்லை. தொகுதி மாறினாலும் எனக்கு வில்லியனூர் தான் முதல் தொகுதி. எப்போதும்போல் உங்களது குறைகளை நிவர்த்தி செய்வேன்.
மக்கள் நலனுக்காக கட்சி மாறியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை இந்த தொகுதிக்கு செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாததால் வருத்தப்பட்டேன். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
வில்லியனூர் தொகுதியை எனது இரு கண்களில் ஒரு கண்ணாக பார்ப்பேன். கூட்டணியில் வில்லியனூர் தொகுதி என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதாகும். முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிக்கும் வேட்பாளரை, நானே போட்டியிடுவதாக கருதி அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று நமச்சிவாயம் கண் கலங்கினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாகமூட்டும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.