20-ந் தேதி திருமணம்... போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள்... அடுத்து நடந்த கோரம்

கரியப்பாவுக்கும், கவிதாவுக்கும் திருமணம் நடத்த 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்தார்கள்.
20-ந் தேதி திருமணம்... போட்டோ சூட் எடுக்க சென்ற மணமக்கள்... அடுத்து நடந்த கோரம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனுமனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா மடிவாளா(வயது 26). இவருக்கும், கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தை சேர்ந்த கவிதா(19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இருவரின் பெற்றோரும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். கொப்பல் டவுனில் வருகிற 20-ந் தேதி கூட்டு திருமணம் நடைபெற உள்ளது.

அப்போது கரியப்பாவுக்கும், கவிதாவுக்கும் திருமணம் நடத்த 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்தார்கள். அதே நேரத்தில் கரியப்பாவின் அண்ணன் ரமேசுக்கும், அதேநாளில் திருமணம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இன்னும் 2 வாரங்களே இருந்ததால், கரியப்பா, கவிதா ஆகியோர் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் நடத்துவதற்கு முடிவு செய்தார்கள்.

ஏனெனில் கூட்டு திருமணம் என்பதால், அதற்கு முன்பே பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ சூட் நடத்தி விடலாம் என்பது அந்த ஜோடியின் முடிவாகும். இதற்கு 2 பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விதவிதமாக போஸ் கொடுத்து கரியப்பாவும், கவிதாவும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போட்டோ சூட் எடுத்து முடிந்ததும் வருங்கால மனைவியை, அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கரியப்பா அழைத்து சென்றார். நேற்று முன்தினம் இரவு கங்காவதி அருகே சிக்கபெனகல் கிராமம் வழியாக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் பழுதாகி ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அதையடுத்து மோட்டார் சைக்கிளை, நடுரோட்டில் ஓட்டியபடி கரியப்பா வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் எதிரே வந்த மற்றொரு லாரி, எதிர்பாராத விதமாக கரியப்பாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கரியப்பாவும், கவிதாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கரியப்பாவின் உயிரும் பிரிந்தது. இதனால் கரியப்பா, கவிதா ஆகியோரின் இல்லற வாழ்க்கை கனவு தகர்ந்தது. இதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். திருமண உற்சாகத்தில் இருந்த அவர்கள் பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது கரியப்பா மற்றும் கவிதா ஆகியோரின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோரும், குடும்பத்தினரும் கதறி துடித்தனர்.

அந்த காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதுபோல் இருந்தது. இதுகுறித்து அறிந்த கங்காவதி புறநகர் போலீசார் விரைந்து வந்து கரியப்பா மற்றும் கவிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இல்லற வாழ்க்கையில் இணைய பல்வேறு கனவுகளுடன் போட்டோ சூட் நடத்தி முடித்த மணமக்கள் விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com