தொண்டர்கள் கடினமாக உழைத்து 5 மாநிலங்களிலும் பாஜகவை வெற்றி பெற செய்வார்கள் - நிதின் நபின்

எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன என நிதின் நபின் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய மந்திரி ஜெ.பி. நட்டா, கடந்த 2020 ஜனவரியில் பாஜக தேசிய தலைவராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரின் 3 ஆண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வந்தார்.இதையடுத்து, பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நிதின் நபினைத் தவிர வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, நிதின் நபின் போட்டியின்றி கட்சியின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஐந்து முறை பீகார் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார். கட்சியின் உயரிய பதவியை வகிக்கும் மிகவும் இளைய தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2029ம் ஆண்டு வரை நிதின் இந்த பதவியில் நீடிக்க உள்ளார். தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பாஜகவின் தேசிய கட்சி தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபின் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியையே பதவி நீக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன.சனாதன நம்பிக்கைகளைப் பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, அசாம், புதுச்சேரியில் வரவிருக்கும் தேர்தல்களில் நாம் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மாநிலங்களில் மக்கள்தொகை தொடர்பான விவகாரம் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மாறி வரும் மக்கள்தொகை அமைப்பு அங்குள்ள சூழலை மாற்றுகிறது. இது நமக்கு சவாலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் பாஜக தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த 5 மாநிங்களிலும் பாஜகவை வெற்றி றெ செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது
ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத்திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்ற நிலையை நாம் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தீபம் ஏற்றும் பாரம்பரியத்தைத் தடுக்கும் சக்திகளுக்கு அரசியலில் இடமிருக்கக் கூடாது. இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






