

புதுடெல்லி,
சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வரும் நியூட்ரினோ அணுத் துகள்களை ஆய்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
இதற்காக தேனி மாவட்டம் தேவாரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தின் அருகே உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு வழங்கியது.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் டாடா நிறுவனம் சமர்ப்பித்த ஒரு மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வுப் பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், டாக்டர் சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசும் ஒரு தரப்பாக விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் வக்கீல் ராகேஷ் சர்மா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடினமான பாறைகள் இருப்பதால், தேனி பகுதியில் வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான 31.44 ஹெக்டேர் நிலத்தை இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டம் தொடர்பான செயல்பாட்டு நிபந்தனைகள் பற்றி மாநில அரசிடம் மத்திய அரசு எதுவும் கூறவில்லை. எனவே, மாநில அரசு சார்பில் இந்த திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதி வழங்கி உள்ளது. இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.
டாடா நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடந்த மாதம் 9-ந் தேதியன்று, இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், டாக்டர் சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை நிறைவேற்ற நீதிபதிகள் சில நிபந்தனைகளை விதித்து உள்ளனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தேசிய வனவிலங்கு வாரியம்
* நியூட்ரினோ ஆய்வு திட்டம் தொடர்பான மதிப்பீடுகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
* இந்த திட்டத்தை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் செயல்படுத்துவதால் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக வெளியிடப்பட இருக்கும் கஸ்தூரி ரங்கன் அறிக்கைக்கு இத்திட்டம் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
* மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா அருகே இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெறவேண்டும். அந்த அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.