

டேராடூன்,
உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புக்காக 78,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,811 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், உத்தராண்டில் இருந்து சேகரிக்கப்பட்ட மொத்தம் 851 கொரோனா பரிசோதனை மாதிரிகள், மரபணு தொடர் சோதனைக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றில் 285 மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டு உள்ளன. இதில், 208 மாதிரிகளின் முடிவின்படி, மாநிலத்தில் சார்ஸ்-கோவி-2 வகை கொரோனா வைரசானது பொதுவாக அதிக அளவில் காணப்படுகிறது என தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, 35 மாதிரிகளின் முடிவில் இருந்து, இங்கிலாந்தில் இருந்து கண்டறியப்பட்ட 3 வெவ்வேறு உருமாறிய கொரோனா வைரசுகளும் மற்றும் பிற மாதிரிகளில் 12 உருமாறிய கொரோனா வைரசுகளும் உள்ளன என்பது கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வைரசுகளில் 32 மாதிரிகளில் பி117 வகை வைரசும், 2 மாதிரிகளில் பி16172 வகை வைரசும், ஒரு மாதிரியில் பி16172 வகை வைரசும் இருப்பது தெரிய வந்துள்ளது. 42 மாதிரிகளில் 12 பிற வகை உருமாறிய கொரோனா வைரசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.