

புது டெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன், அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி இல்லாதது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி உள்கட்டமைப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசின் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டம் ஏட்டளவில் மட்டுமே இருப்பதாகவும் அது களத்தில் இல்லை என்று அவர் விமர்சித்தார்.
சத்தீஸ்கரில் உள்ள 5,000-த்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறைகள் இல்லை என்ற சமீபத்திய அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார். விவகாரத்தில் அதிருப்தி அடைந்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், "பெண் குழந்தைகளுக்குக் கழிப்பறை வசதி கூட இல்லாதது மிகவும் வெட்கக்கேடானது" என்று மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் உள்ள சுமார் 22 சதவீத பள்ளிகளில் பெண் மாணவர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முழுவதும் இல்லை. மேலும் சுத்தமான தண்ணீர், சோப்பு மற்றும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தால், ஆண்டுதோறும் சுமார் 2.3 கோடி மாணவிகள் பள்ளியை விட்டுப் பாதியிலேயே வெளியேறுகிறார்கள் என்று ரஞ்சித் ரஞ்சன் நாடாளுமன்றத்தில் கூறினார்.