வீரசாவர்க்கர் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்று பணியாற்றிய வரலாறு உண்டு - சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல்

வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்று பணியாற்றிய வரலாறு உண்டு என சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
வீரசாவர்க்கர் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்று பணியாற்றிய வரலாறு உண்டு - சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல்
Published on

புதுடெல்லி,

மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் வாசிம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, வீரசாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர் என கூறியிருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மும்பை சிவாஜி பார்க் போலீசில் ராகுல் காந்தி மீது புகார் அளித்து உள்ளார்.

இந்த நிலையில், வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்று பணியாற்றிய வரலாறு உண்டு என சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சுதந்திர போராட்டத்தின் போது பலர் சிறைக்கு சென்றுள்ளனர். சிறை சென்ற பாலகங்காதர திலகர் மன்னிப்பு கேட்கவில்லை, பகத்சிங், காந்தி, நேரு மற்றும் சர்தார் படேல் உள்ளிட்டோரும் மன்னிப்பு கேட்கவில்லை. சாவர்க்கரை 2 பாகங்களாக பிரித்து பார்க்க வேண்டும். சிறைக்கு செல்வதற்கு முன் அவர் புரட்சியாளர், சிறையில் அவர் மன்னிப்பு கேட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவர் தனது புரட்சிகர செயல்பாடுகளுக்கு நேர்மாறாக நடந்து கொண்டார். அவர் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்று பணியாற்றிய வரலாறு உண்டு. எனவே, அவரை இரண்டு பாகங்களாக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com