பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை- டெல்லி ராணுவ மருத்துவமனை

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை- டெல்லி ராணுவ மருத்துவமனை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்தநிலையில், நேற்று முன்தினம் காலையில் அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார். எனினும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியது.

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இன்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில்தான் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவருக்கு பல இணை நோய் பாதிப்புகள் இருப்பதாகவும் உடல் நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com