

புதுடெல்லி,
கொரோனா பாதிப்பை தொடர்ந்து, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், மக்களுக்கு உள்ள பொறுப்புகளை உணரச் செய்வது மட்டும் தலைமைக்கு அழகல்ல, நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை உணரவேண்டும் என்றார். நிறைய பேசியாகிவிட்டது என்றும், ஆனால் கொரோனா தடுப்புக்கான திட்டம் எங்கே? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வி கூறி இருப்பதாவது:-
பிரதமரின் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்த வெற்று அறிவுரையாகத்தான் உள்ளது. ஏழைகளுக்கோ, நடுத்தர மக்களுக்கோ அல்லது தொழில்துறையினருக்கோ நிதி உதவி அளிக்கும் திட்டம் பற்றிய உறுதியான அறிவிப்பு எதுவும் இல்லை. பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கான திட்டம் இல்லை.
ஊரடங்கு என்பது நல்லதுதான். இது ஒவ்வொருவரின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஊரடங்கை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும் அரசு ஈடுசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஏற்கனவே 21 நாள் ஊரடங்கில் இருந்த ஏழைகள் மேலும் 19 நாள் ஊரடங்கில் எந்த பாதுகாப்பும் இன்றி, உணவும் இன்றி தவிக்க விடப்பட்டு உள்ளனர். அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. உணவுப் பொருள் இருக்கிறது. ஆனால் அது மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நாட்டு மக்கள் பசியால் வாடுகிறார்கள்.
ஊரடங்கை நான் வரவேற்பதோடு, அது நீட்டிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த பணம் வேண்டும் என்று மாநில முதல்-மந்திரிகள் விடுத்த கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லை. மார்ச் 25-ந் தேதி அறிவித்த நிதி உதவி திட்டத்தை தவிர ஒரு ரூபாய் கூட கூடுதலாக அறிவிக்கப்படவில்லை. ரகுராம் ராஜன், பிரபாத் பட்நாயக், அபிஜித் பானர்ஜி போன்றோர் தெரிவித்த யோசனைகளை அரசு பொருட்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டித்ததை வரவேற்பதாக தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர் எம்.பி., வேலைவாய்ப்பு மற்றும் பணம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை அறிவித்து இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.