வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதற்கான ஆதாரம் இல்லை; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி

வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதற்கான ஆதாரம் இல்லை; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
Published on

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

2018-ம் ஆண்டே சிலுமே நிறுவனத்திற்கு...

பெங்களூருவில் உள்ள வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக சிலுமே நிறுவனத்தின் மீது கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதியே மாநகராட்சிக்கு புகார் வந்தது. அன்றைய தினமே மாவட்ட அதிகாரி, சிலுமே நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைத்திருந்தார். மாநகராட்சி சார்பில் சிலுமே நிறுவனத்திற்கு, பெங்களூருவில் உள்ள வாக்காளர்களின் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அத்துடன் வாக்காளர்களின் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி சிலுமே நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சிலுமே நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு நானே தகவல்களை தெரிவித்துள்ளேன். கடந்த 2018-ம் ஆண்டு சிலுமே நிறுவனத்திற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. சிலுமே நிறுவனத்திற்கு தற்போது புதிதாக எந்த பணிகளும் வழங்கவில்லை.

ஆதாரங்கள் இல்லை

வாக்காளர்களின் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் சிலுமே நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டி உள்ளது. வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வாக்காளர்களின் தகவல்களை திருடிய சந்தேகம் எழுந்துள்ளதால், அதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாநகராட்சி, போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளது.

மாநகராட்சி அளித்த புகார்களின் பேரில் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வரும். சிலுமே நிறுவனத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பங்குதாரராக இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. போலீசார் ஓரிரு நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அந்த அறிக்கையில் தான் வாக்காளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் தவறு எதுவும் இல்லை.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com