கோவில் நகைகளை பணமாக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை: மத்திய அரசு விளக்கம்

கொள்கை முடிவுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள்மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவில் நகைகளை பணமாக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை: மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை அரசு 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தியிருந்தது. இந்த வரி உயர்வு மற்றும் தங்கம் தொடர்பான விவாதங்களை அடுத்தே, கோவில்களின் தங்கத்தை அரசு கையகப்படுத்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் போலி ஆவணங்களுடன் வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்தநிலையில் மத்திய நிதி அமைச்சகம், கோவில் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்கள் வைத்துள்ள தங்கத்தை பணமாக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் சில ஊடகச் செய்திகளிலும் இது தொடர்பாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, ஏமாற்று வேலை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறி மத்திய அரசு அவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கோவில் அறக்கட்டளைகளின் வசம் உள்ள தங்க இருப்புகளுக்குப் பதிலாக அவர்களுக்குத் தங்கப் பத்திரங்களை வழங்கும் எந்தவொரு முன்மொழிவுக்கும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. கோவில் கோபுரங்கள், கதவுகள் அல்லது பிற கோவில் கட்டமைப்புகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தட்டுகள், இந்தியாவின் அவசரகால தங்க இருப்பு ஆகக் கருதப்படும் என்ற கூற்றையும் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது.

பொதுமக்கள் இத்தகைய போலி ஆவணங்கள் மற்றும் வதந்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொள்கை முடிவுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் மற்றும் அரசு வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com