

பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்குகள் எண்ணத்துவங்கியதும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது. இதனால், தொங்கு சட்ட சபை ஏற்படக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அண்மையில் கிடைத்துள்ள தகவலின் படி, முன்னணி நிலவரம் தெரிய வந்த 214 தொகுதிகளில் 107 இடங்களில் பாரதீய ஜனதா கட்சியும், 63 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சி 42 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார். கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.