

புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகளவில் பதிவாகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் உயர்நிலை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டார்.
இதன்படி கடைகள், அங்காடிகள், உணவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்தார். அதே போல ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையில், புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளன. ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு என்ற செய்தியை நானும் பார்த்தேன். உடனே சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டேன். அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். மருந்து தட்டுப்பாட்டால் புதுச்சேரியில் நோயாளிகள் உயிர் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கொரோனா பாதிப்பை பொறுத்து அடுத்த ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.