விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதி: விவசாயிகள் நலன்களை பாதுகாக்க புதிய சலுகைகள் - மத்திய அரசு தீவிர பரிசீலனை

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கிற விதத்தில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதி: விவசாயிகள் நலன்களை பாதுகாக்க புதிய சலுகைகள் - மத்திய அரசு தீவிர பரிசீலனை
Published on

புதுடெல்லி,

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் இன்றைக்கு விவசாயிகள் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளாகவே விவசாயிகள் வேதனையில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

அவர்களது மிகப்பெரிய மனக்குறை, கடன்களை வாங்கி சாகுபடி செய்தாலும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதுதான்.

இந்த நிதி ஆண்டு, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக முடியப்போகிறது என்பதை அரசின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

டிசம்பர் மாத மொத்த விலை குறியீட்டு எண் விவரங்களை மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண், கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களாக எதிர்மறையாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, முதன்மை உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து உள்ளன.

முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் ஜூலை மாதத்தில் மைனஸ் 2.1 சதவீதம், ஆகஸ்டு மாதத்தில் மைனஸ் 4 சதவீதம், செப்டம்பர் மாதத்தில் மைனஸ் 0.2 சதவீதம், அக்டோபர் மாதத்தில் மைனஸ் 1.4 சதவீதம், நவம்பர் மாதம் மைனஸ் 3.3 சதவீதம், டிசம்பர் மாதம் மைனஸ் 0.1 சதவீதம் என இருந்து இருக்கிறது.

கடந்த 1990-ல் இப்படி முதன்மை உணவு பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் தொடர்ந்து இருமுறை எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.

விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்ததால், விவசாயிகளின் வருமானம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவுக்கும் கடந்த ஜூலை மாதம் 14 விவசாய பொருட்கள் மீதான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது. இருப்பினும் கரீப் பருவத்தில் (சம்பா) குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் தரவில்லை. ஏனெனில் பொருட்களுக்கு கிராக்கி குறைந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக ஆக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

இருப்பினும் சமீபத்தில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், விவசாயிகள் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானம், சமீப ஆண்டுகளில் பட்ஜெட்டில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்க வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி அரசு வழங்கப்பட்டுள்ள உரிய காலத்திற்குள் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்ற நோக்கத்தை அடைவதில் இந்த தேசிய செயற்குழு நம்பிக்கை வைத்துள்ளது என கூறப்பட்டு உள்ளது.

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் படுகிற இன்னல்களால்தான் சமீபத்தில் இந்தி பேசுகிற மாநிலங்களான சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாரதீய ஜனதா கட்சிக்கு தோல்வியை தந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த தோல்வி வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்பதில் பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கையுடன் உள்ளது.

எனவே தொடர்ந்து அவதிப்படும் விவசாயிகளின் நலன்களை பேணுகிற வகையில் அவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, 1 ரூபாயில் பயிர்க்காப்பீடு, விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை ஈடுகட்டுகிற வகையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குதல் உள்ளிட்டவை பரிசீலனையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கூட்டணி அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com