கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை- சுப்ரீம் கோர்ட்டு


கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை- சுப்ரீம் கோர்ட்டு
x

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கல்லூரி கட்ட இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோயில் நிலத்தில் கல்லூரி அமைக்க அனுமதித்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு , ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய மறுத்தது. இதையடுத்து கல்லூரி கட்டும் முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு எதிராக ரமேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. ம்

விசாரணையில், நீதிபதிகள் ரமேஷிடம் “இந்தக் கட்டுமானத்தைத் தடுக்க உங்களிடம் என்ன காரணம் உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு ரமேஷ் தரப்பு வழக்கறிஞர், “கல்லூரி கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் உண்மையில் கொளத்தூர் சோம்நாத் ஆலயத்தின் நிலம். அந்த நிலத்தில் கல்லூரி அமைப்பதோடு, கோயில் நிதியையும் பயன்படுத்துகின்றனர். எனவே அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “அந்த நிலம் இலவசமாக பயன்படுத்தப்படவில்லை; மாதந்தோறும் ரூ.3,19,000 வாடகை கோயிலுக்கு வழங்கப்படுகிறது. மேலும், கபாலீஸ்வரர் கோவில் சார்பிலேயே கல்லூரி அமைக்கப்படுகிறது. அது கல்விக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

நீதிபதிகள் இதனை ஏற்றுக்கொண்டு, “மாணவர்களின் எதிர்கால நலனுக்காக கோயில் நிதியை கல்விக்குப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை” எனக் குறிப்பிட்டனர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story