

புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு 110 சதவீதம் வரை இருக்கும் என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்ப அலை தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்பதால், இது ஆரம்ப கால வெப்ப அலைகளில் இருந்து மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். இருப்பினும், மழைப் பரவல் நாடு முழுவதும் சீராக இருக்காது என்றும், வடகிழக்கு மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை செயல்பாடுகளைப் பொறுத்தவரை, மே 5-ஆம் தேதி வரை மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், மே 3 முதல் மே 6 வரை வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சமவெளிப் பகுதிகளிலும், கிழக்குக் கடற்கரை மாநிலங்களிலும் இடி மற்றும் புயல் செயல்பாடுகள் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.