நிரவ் மோடிக்கான தேடல்; பிஎன்பி மோசடியை விசாரிக்கும் 7 விசாரணை முகமைகள் விபரம்

நிரவ் மோடி தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கை 7 விசாரணை முகமைகள் விசாரித்து வருகின்றன. #NiravModi #PunjabNationalBank #PNBfraud
நிரவ் மோடிக்கான தேடல்; பிஎன்பி மோசடியை விசாரிக்கும் 7 விசாரணை முகமைகள் விபரம்
Published on

மும்பை/புதுடெல்லி,

நாட்டின் 2-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி நடந்து உள்ளது வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை தீவிர சோதனை மற்றும் விசாரணையை நடத்தி வருகிறது.

இவ்வழக்கை விசாரிக்கும் 7 விசாரணை முகமைகளும் நிரவ் மோடியை தேடி வருகிறது. மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், தொழில் அதிபர் மெகுல் சோஷி வெளிநாட்டிற்கு தப்பிவிட்டனர். நிரவ் மோடி மற்றும் மெகுல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் விடுத்து உள்ளது.

7 விசாரணை முகமைகள் விபரம்:-

சிபிஐ

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்து உள்ளது. சிபிஐ தன்னுடைய முதல் எப்.ஐ.ஆர்.ஐ ஜனவரி 31-ம் தேதி பதிவு செய்தது. நிரவ் மோடியின் நிறுவனத்திற்கு ரூ. 6,498 கோடி மதிப்பளவில் எல்ஒயூ மோசடியாக வழங்கியது தொடர்பாக முதல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது எப்.ஐ.ஆர். ரூ. 3,032 கோடி அளவில் அதிகாரப்பூர்வமற்ற எல்ஒயூ வழங்கியது மற்றும் நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோஷியின் மூன்று நிறுவனத்திற்கு ரூ. 1,854 கோடி அளவில் எப்எல்சி வழங்கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்டது. கிரிமினல் சதிதிட்டம் மற்றும் எல்ஒயூ மற்றும் எப்எல்சி வழங்கலில் ஊழல் தொடர்பாக சிபிஐ கவனம் செலுத்தி வருகிறது.

சிபிஐ இவ்வழக்கில் இரண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளையும் மற்றும் நிரவ் மோடி நிறுவனத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை கைது செய்து உள்ளது.

அமலாக்கப்பிரிவு

பிஎன்பி மோசடியில் சிபிஐ பதிவுசெய்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் பணமோசடி காரணிகளை கண்டறிய அமலாக்கப்பிரிவு இரண்டு அமலாக்கத் துறையின் தகவல் அறிக்கையை பதிவு செய்து உள்ளது. நேற்று மாலை வரையில் நிரவ் மோடி, சோஷி நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவு மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட வைரம், தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க பிற கற்களின் விலை ரூ. 5,674 கோடி என கணிக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்குகள், சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளது. விசாரணைக்கு 23-ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கப்பிரிவு நிரவ் மோடி மற்றும் மெகுல் சோஷிக்கு சம்மன் விடுத்து உள்ளது.

வருமான வரித்துறை

பிஎன்பி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக வருமான வரித்துறை சட்டம் மற்றும் கருப்பு பண சட்டத்தின் (வெளி தெரிவிக்கப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) கீழ் வருமான வரித்துறையும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நிரவ் மோடி, அவருடைய மனைவி மற்றும் நிறுவனங்களின் 29 அசையா சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்து உள்ளது. நிரவ் மோடி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் 105 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இந்திய வருமான வரி சட்டத்தின்கீழ் நிரவ் மோடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி விசாரணை நடக்கிறது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

இந்தியாவின் தலையாய கண்காணிப்பு முகமையான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ரூ.11,400 கோடி மோசடியில் கண்காணிப்பு குறைபாடு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர், சிஇஒ சுனில் மெக்தா ஆகியோர் ஆணையம் முன்னதாக தலைமை அதிகாரியுடன் ஆஜரானார்கள், நீண்ட நாட்களாக மோசடி கண்டுபிடிக்கப்படாமல் சென்றது எப்படி என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார்கள்.

மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்

பிஎன்பி மோசடி வழக்கில் மேற்கொண்டு விசாரணையை முன்னெடுக்க பணம் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட 150 போலி நிறுவனங்களை மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் (எம்சிஏ) அடையாளம் கண்டு உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தகவல் வெளியாகி விசாரணை தொடங்கியதும் அமலாக்கப்பிரிவு நிரவ் மோடி மற்றும் மெகுல் சோஷியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி பரிந்துரை மேற்கொண்டது. அமலாக்கப்பிரிவு கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறையில் உள்ள பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் நிரவ் மோடி மற்றும் அவருடைய வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷியின் பாஸ்போர்ட் செல்லுபடிதன்மையை உடனடியாக ரத்து செய்தனர், 4 வார காலங்களுக்கு இது அமலில் இருக்கும்.

பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்ய கூடாது? ரத்து செய்யக்கூடாது? என கேள்வியை எழுப்பி வெளியுறவுத்துறை இருவருக்கும் நோட்டீஸ் விடுத்து உள்ளது. சரியான நேரத்தில் அவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இருவரும் தங்களுடைய பதிலை ஒரு வாரத்துக்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இன்டர்போல்

பிஎன்பி மோசடியில் நிரவ் மோடி மற்றும் பிற குற்றவாளிகளை பிடிக்க இன்டர்போலை சிபிஐ நாடிஉள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com