வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கட்டுக்கதை விடுகின்றனர்: சுரேஷ் கோபி பதிலடி

வாக்காளர் பட்டியலில் சந்தேகம் இருந்தால், தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெளிவு பெறுங்கள் என்று சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
திருச்சூர்,
மத்திய சுற்றுலாத்துறை மற்றும் பெட்ரோலியத்துறை இணை மந்திரியும், நடிகருமான சுரேஷ் கோபி திருச்சூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து உள்ளது குறித்து நீங்கள் தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இல்லை. தேர்தல் ஆணையத்தை அணுகி, இதுகுறித்த புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளலாம். எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
திருச்சூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்காகவும், தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்காகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறேன். இங்குள்ள சில பொறுப்பற்றவர்கள், ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும், வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்.
அவர்களுக்கு நான் கூற விரும்புவது, உங்கள் வேலையை பாருங்கள். உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் சந்தேகம் இருந்தால், தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெளிவு பெறுங்கள். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதை பொறுக்க முடியாதவர்கள், இதுபோன்ற கட்டுக்கதைககளை அவிழ்த்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






