நள்ளிரவில் வீடு புகுந்த திருடர்கள்; தனி ஆளாக, துணிச்சலாக எதிர்கொண்ட கல்லூரி மாணவி

வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்களை 18 வயது கல்லூரி மாணவி தனியாக போராடி, எதிர்கொண்டு, திருட்டை தடுத்ததில் பலத்த காயமடைந்து உள்ளார்.
நள்ளிரவில் வீடு புகுந்த திருடர்கள்; தனி ஆளாக, துணிச்சலாக எதிர்கொண்ட கல்லூரி மாணவி
Published on

சூரத்,

குஜராத்தின் கதோதரா நகரில் சல்தான் பகுதியில் ராம் கபீர் சொசைட்டியில் வசித்து வருபவர் ரியா (வயது 18). கல்லூரி மாணவியான அவர், இரவில் தூங்காமல் தனது தேர்வுக்காக தயாராகி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வீட்டின் பின்புறம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

அந்த பகுதியில், மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால், சத்தம் வந்தது பற்றி அவர் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், ஒரு சில வினாடிகளில் கையில் கத்தியுடன் ஒரு நபர் ரியாவின் முன் வந்து நின்றுள்ளான்.

என்ன, ஏது என்று அறிவதற்குள் அந்த நபர், படுக்கையின் மீது ஏறி வந்து, ரியாவின் கழுத்தில் கத்தியை வைத்து உள்ளான். அதன்பின்பு, 2 பேர் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவன் தூங்கி கொண்டிருந்த ரியாவின் இளைய சகோதரியை தாக்க முயன்றுள்ளான். இவர்கள் கொள்ளை கும்பல் என்று ரியாவுக்கு புரிந்துள்ளது.

இந்நிலையில், ரியாவின் கழுத்தில் கத்தி வைத்திருந்த நபர் சற்று கவனம் தவறிய நிலையில், ரியா உடனடியாக அந்த கத்தியை தள்ளி விட்டுள்ளார். இந்த முயற்சியில், அவரது இடது கையில் பெரிய காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த கலவரத்தில், அருகே தூங்கி கொண்டிருந்த அவரது சகோதரியையும் இழுத்துள்ளார். இதனால், அவரும் எழுந்து சுற்று முற்றும் பார்த்துள்ளார். இந்நிலையில், ரியா உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளார்.

அவர் கூறும்போது, நான் நம்பிக்கையை இழக்கவில்லை. தைரியமுடன் செயல்பட்டது என்னையும், எனது சகோதரியையும் காப்பாற்றியதுடன், திருட்டையும் தடுக்க முடிந்தது என கூறியுள்ளார்.

அவர் திருடர்களை தள்ளி விட்டதுடன் நில்லாமல், கூச்சலிட்டதில், அவர்களின் தாயார் எழுந்து உதவிக்கு வந்துள்ளார். இவை எல்லாவற்றையும் பார்த்த அந்த கும்பல் சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடி விட்டது.

இதுபற்றி கதோதரா பகுதி காவல் அதிகாரி கூறும்போது, திருடர்கள் விலையுயர்ந்த பொருட்கள் எதனையும் திருடி செல்லவில்லை. மொபைல் போன் ஒன்றை மட்டுமே தூக்கி சென்றுள்ளனர். சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ரியா சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், 18 மணிநேரத்திற்கு பின்னர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com