காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
Published on

குடகு:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா தலைக்காவிரியில் புண்ணிய நதியான காவிரி உற்பத்தியாகிறது. இந்த காவிரி நதி கர்நாடகம், தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. காவிரி நதி பிறப்பிடமான தலைக்காவிரியில் பிரம்மகுந்திகே பகுதியில் காவிரி தாய் காவிரி தீர்த்தரூபிணியாக காட்சி அளிக்கிறார்.

ஆண்டுதோறும் கடக லக்கனத்தில் துலாம் பெயர்ச்சி நடக்கும்போது இங்கு காவிரி தீர்த்த உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.

இதேபோல், இந்த ஆண்டும் காவிரி தீர்த்த உற்சவம் நள்ளிரவு 1.27 மணிக்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நள்ளிரவு 1.27 மணிக்கு துலாம் லக்கனத்தில் காவிரி தீர்த்த உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவு 1.27 மணிக்கு காவிரி தாய், தீர்த்த ரூபிணியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதன்மை அர்ச்சகர் குருராஜ் ஆச்சார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நள்ளிரவிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து காவிரி தாயை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் வினியோகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் புனித நீரை குடம் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், கேன்களில் பிடித்து சென்றனர்.

காவிரி தீர்த்த உற்சவத்தையாட்டி நேற்று இரவு முழுவதும் கோவில் திறக்கப்பட்டு இருந்தது. மேலும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. காவிரி தீர்த்த உற்சவத்தையொட்டி தலைக்காவிரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று மாலை 4 மணிக்கு பிறகு பாகமண்டலாவில் இருந்து தலைக்காவிரிக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் பக்தர்களின் வசதிக்காக பாகமண்டலாவில் இருந்து தலைக்காவிரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த முறை புனித நீரை எடுத்து செல்ல பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டு இரவில் காவிரி தீர்த்த உற்சவம் நடந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com